தென் தமிழ்நாடு அரசியல் எப்படி உள்ளது? தொழில் வளர்ச்சி சிக்கல் என்ன செய்யும்?

Contacts:
  • ஏ.ஆர்.மெய்யம்மை
  • பிபிசி தமிழுக்காக
30 மார்ச் 2021, 02:26 GMT

புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரை

பட மூலாதாரம், Getty Images

(நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தெற்கு, வடக்கு, மேற்கு, நடு என்று மாநிலத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் அரசியலைத் தீர்மானிக்கும் வாய்ப்புள்ள காரணிகள் எவை, அங்கு நிலவும் சமூக, பொருளாதார நிலைமை என்ன என்பதை பிபிசி தமிழின் சார்பில் ஆராய்ந்து தொடர் கட்டுரைகளாக வெளியிடுகிறோம். இந்தத் தொடரின் முதல் கட்டுரையாக தென் மாவட்டங்களின் நிலையைக் காட்டும் இந்தக் கட்டுரை வெளியாகிறது)

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தற்போது அமைக்கப்பட்ட தென்காசி ஆகியவை பெரிதாக வளர்ச்சி காணவில்லை.

இன்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இளைஞர்கள் வேலை தேடி பெருநகரங்களான சென்னை, பெங்களூரு நோக்கியே சென்ற வண்ணம் இருக்கின்றனர். இரண்டாம் நிலை மாநகரமான கோயம்புத்தூருக்கும் கூட கடந்த சில ஆண்டுகளாகச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தென் மாவட்டங்கள் மத்திய, மாநில அரசாங்கங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 58 தொகுதிகள் தென் மாவட்டங்களில் அமைந்திருக்கின்றன. இதில் மதுரையில் அதிகப்படியாக 10 தொகுதிகளும், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 7 தொகுதிகளும் அமைந்துள்ளன. சுமார் ஏழேகால் கோடி மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) கொண்ட தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் தென் மாவட்டங்களில் வாழ்கின்றனர். அதில் அதிகப்படியாக 33.22 லட்சம் பேர் திருநெல்வேலி மாவட்டத்திலும் 30.38 லட்சம் பேர் மதுரை மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட தொழில் வளர்ச்சி திட்டம்

தென் மாவட்டங்களில் நிறைவேற்றுவதற்காக தீட்டப்பட்ட பல திட்டங்கள் திட்டங்களாக மட்டுமே இருக்கின்றன. அதற்கு அரசு செயல் வடிவம் கொடுக்கவில்லை என்பதே இங்குள்ள தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினரின் குற்றச்சாட்டு.

“கடந்த பத்து ஆண்டுகளாக தென் மாவட்ட வளர்ச்சிக்காக நாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கோரிக்கைகளாகவே இருக்கின்றன. ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை,” என்கிறார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் நா. ஜெகதீசன்.

தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட ஓரிரண்டு கனரகத் தொழிற்சாலைகளை தவிர்த்து வேறு கனரகத் தொழிற்சாலைகளே இந்தப் பகுதியில் இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013 ம் ஆண்டு அறிவித்த மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி தொழில் பெருவழிச் சாலை திட்டம் ஏழு ஆண்டுகள் கடந்தும் எழுத்தில் மட்டுமே உள்ளது. இதற்காக ஒரு சிறப்பு நோக்க ஊர்தி அமைத்ததோடு சரி, வேறு எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை.

“நில வங்கி உருவாக்கி அருப்புக்கோட்டைக்கும் எட்டயபுரத்திற்கும் இடையில் முதல் கட்டமாக 2000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி இந்தத் திட்டத்தை தொடங்க முடியும். இங்கிருந்து மதுரை விமான நிலையம் 30 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடி துறைமுகம் 40 கி.மீ தொலைவிலும் உள்ளதால் தொழிற்சாலைகள் இயங்க ஏதுவாக இருக்கும். பவர் கிரிட் அருகில் இருப்பதால் தடையில்லா மின்சாரம் கிடைக்கச் செய்திட முடியும். ஆனால் நிலத்தடி நீரை காரணம் காட்டி ஆட்சியாளர்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளார்கள்,” என்கிறார் அவர்.

மதுரை விமான நிலையத்தின் நிலை

கடந்த பத்து ஆண்டுகளாக, மதுரை விமான நிலையம் சுங்கவரி விமான நிலையமாக மட்டுமே செயல்படுகிறது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி காண அதை பன்னாட்டு விமான நிலையமாக்க தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது.

மதுரை

பட மூலாதாரம், Getty Images

மதுரை விமான நிலையம் சுங்கவரி விமான நிலையமாக 2011 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இந்திய விமானசேவை நிறுவனங்களாகிய ஸ்பைஸ் ஜெட் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

“பன்னாட்டு விமான நிலையமாக வேண்டுமெனில் மற்ற நாடுகளுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி அந்நாட்டு விமானங்களை மதுரைக்கு இயக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போது இலங்கையுடன் மட்டுமே இந்த ஒப்பந்தம் உள்ளது. அதுவும் 30 ஆண்டுகளுக்கு முன்னே தற்செயலாக ஏற்படுத்தப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் அவர்களின் விமானங்களை மதுரைக்கு இயக்கத் தயாராக இருந்தும் மத்திய அரசு அதை அனுமதிக்க மறுக்கிறது,” என்கிறார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேல்.

தென் தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய விரைவில் அழுகக்கூடிய விவசாயப் பொருட்கள் தற்போது திருச்சி, கோவை, கொச்சி விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன. மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவையை அறிமுகப்படுத்தி சரக்கு விமானங்களும் இயக்கப்பட வேண்டும் எனவும் ஓடுதள விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாவட்ட நிர்வாகம் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

என்று துவங்கும் எய்ம்ஸ் பணி?

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி 2019 ல் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு சில நாட்களுக்கு முன் அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் துவங்கப்படவில்லை. நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இது எதிர்க்கட்சிகளின் பேசு பொருளாகியுள்ளது. சமீபத்தில் மதுரையில் பேசிய திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தான் ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நிறைவேறாத கடல் சார்ந்த திட்டங்கள்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 2005ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சேது சமுத்திர கால்வாய் திட்டம் பாஜக அரசால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். பாக் நீரிணை பகுதியை ஆழப்படுத்தி, இந்தியப் பெருங்கடலில் இருந்து செல்லும் கப்பல்கள், இலங்கையை சுற்றாமல், சேது கால்வாய் வழியாக வங்கக் கடலுக்கு செல்ல ஏற்றதாக மாற்றும் திட்டமே இத்திட்டம். பாஜக தலைவர் சுப்பிரமணியன் ஸ்வாமி தாக்கல் செய்த மனுவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பின் இக்கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி செப்டம்பர் 2007 ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதற்காக சேது சமுத்திரம் கார்பரேஷன் ரூபாய் 850 கோடி செலவிட்டுள்ளது.

பாஜக அரசால் 2016 ம் ஆண்டு ரூபாய் 27,570 கோடியில், பெரிய சரக்கு கப்பல்களை கையாள்வதற்காக, முன்மொழியப்பட்ட குளச்சல் துறைமுகத் திட்டத்திலும் முன்னேற்றம் இல்லை. சில மீனவ சங்கங்களின் எதிர்ப்பும், கேரள அரசின் எதிர்ப்பும், அதானி குழுமத்தினரால் 35 கி.மீ தொலைவில் கேரளாவில் உள்ள விழிஞ்ஞத்தில் அமைக்கப்படும் துறைமுகமுமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

தென் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மத்திய, மாநில அரசுகள் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார் ரத்தினவேல்.

இழுத்து மூடப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்

முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியில் கொண்டு வரப்பட்டு 2001-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் முடங்கிய நிலையிலேயே இருக்கிறது. போதிய அளவு நிலங்கள் கையகப் படுத்தப்பட்டதை தொடர்ந்து, 2007-ம் ஆண்டு மத்திய அரசு இதை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஒப்புதல் வழங்கியது. இத்திட்டதால் 70,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் போதிய கட்டமைப்பு, போக்குவரத்து, தண்ணீர், மின்சார வசதிகள் அரசாங்கத்தால் செய்து தரப்படாததால் இத்திட்டம் தொடக்க நிலையிலேயே தேங்கி நிற்கிறது.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளின் கோரிக்கை

பட்டாசு

பட மூலாதாரம், Getty Images

தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் பட்டாசுத் தொழிலை மாசு ஏற்படுத்தாத தொழில் என்று அறிவிக்குமாறும், தேசிய விடுமுறை தினங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கு தடை விதித்தல் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“எட்டு லட்சம் தொழிலாளர்கள் நம்பியிருக்கும் பட்டாசு தொழில் பாதிப்படையாமல் இருக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் 3 மற்றும் 3 (பி) யிலிருந்து பட்டாசுத் தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். ஜல்லிக்கட்டுக்கு எப்படி அரசு காளைகளை காட்சிப் பொருள் பட்டியலிலிருந்து நீக்கி அனுமதி கொடுத்ததோ, அதே போன்று உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து பட்டாசுத் தொழிலுக்கும் தளர்வு அளிக்க வேண்டும். சென்ற ஆண்டு கொரோனா காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு ஏழு மாநிலங்கள் தடை விதித்தன. தேசிய விடுமுறைகளில் கொண்டாட்டங்களுக்கு தடை கூடாது என்றே சர்வதேச கூட்டமைப்பு சட்டம் சொல்கிறது. அதை சுட்டிக் காட்டி இனி வரும் காலங்களில் மாநில அரசுகள் விழாக்களில் பட்டாசு வெடித்து கொண்டாட அனுமதி மறுக்கக்கூடாது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் அதிமுக மற்றும் பாஜகவிடம் முன்வைத்துள்ளோம்,” என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். கணேசன்.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. நேரடியாக மூன்று லட்சம் பேரும், மறைமுகமாக ஐந்து லட்சம் பேரும் இத்தொழிலை நம்பி இருக்கின்றனர்.

பெருகும் ஸ்டார்ட்அப் கலாசாரம்

சமீபகாலமாக தென் பகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தொழில்முனைவில் ஆர்வம் காண்பிப்பதை பார்க்க முடிகிறது. இது பொதுவாக சென்னையிலும், மேற்கு மாவட்டங்களிலும் காணப்படும்.

“அரசாங்கத்தின் உறுதுணை இல்லாமலேயே இது நடக்கிறது. இந்த ஸ்டார்ட்அப் கலாச்சாரம் உருவாக பல காரணிகள் உள்ளன. கல்வி, ஊடகங்களின் மூலம் நடக்கும் அறிவுப் பரிமாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவை அதில் அடங்கும். இது தன்முனைப்பால் உருவான மாற்றம் என்றே சொல்லலாம். இதற்கு அரசாங்கம் ஊக்கமும், ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும்,” என்கிறார் ரத்தினவேல்.

ஆனால் நேட்டிவ்லீட் என்னும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் அமைப்பை நடத்தும் ரா. சிவராஜா கூறும்போது தொழில் முனைவு கலாசாரத்தை உருவாக்க மாநில அரசின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் மூலம் நிதி மற்றும் மானியம் கிடைப்பதாக கூறுகிறார். ஆனால் உள்கட்டமைப்பு இருந்தும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் பல சமீபகாலமாகச் சென்னைக்கு இடம் பெயர்வதாகச் சொல்கிறார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. தந்த வேதனை

சுமார் நாலரை ஆண்டுகள் ஆனபின்னும் முந்தைய பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மத்தியில் இருப்பதை பார்க்க முடிகிறது.

பண்ம

பட மூலாதாரம், Getty Images

“ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாதவை என்று அறிவித்த அந்த நடவடிக்கையால் பல தொழில்கள் மீண்டு எழ முடியாமல் நசுங்கிவிட்டன. அதன் தாக்கம் இன்றளவும் தொடர்கிறது. அதோடு சரக்கு மற்றும் சேவை வரியினை முறையற்று செயல்படுத்துவதாலும் சிறு தொழில்கள் பாதிப்படைவது தொடர்கிறது. மரம் அறுக்கும் ஆலைகளுக்கு பேர் போன தென்காசி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ஊர்களில் அவற்றின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. இந்தப் பகுதியில் பல தட்டோடு தயாரிக்கும் தொழிற்சாலைகளும், அரிசி ஆலைகளும் காணாமல் போய்விட்டன. வேலைவாய்ப்பின்மையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து படித்த இளைஞர்கள் பெருநகரங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் இடம் பெயர்வது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது,” என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில துணை தலைவர் எம்.சி.எ. மார்ட்டின்.

‘இரண்டாம் தலைநகரம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’

தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் மதுரையை இரண்டாம் தலைநகரமாக்கினால் பின் தங்கிய இம்மாவட்டங்களில் வளர்ச்சி சாத்தியம் என்று நம்புகிறார் ஜெகதீசன். சென்னையில் 75 ஆணையங்களும், 200 தலைமை அலுவலகங்களும், தலைமை செயலகத்தில் 42 துறைகளும் செயல்படுகின்றன. இதில் முக்கியத்துவமற்ற ஒரு 15 துறைகளையாவது மதுரைக்கு மாற்றுவது தென் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரையில் அமைவதற்கு முதலில் எதிர்ப்பு இருந்தது. பிறகு ஒரு வல்லுனர் குழு அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் உயர் நீதிமன்றக் கிளை நிறுவப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கும் வல்லுனர் குழுவின் பரிந்துரையே காரணம். அது போல் இரண்டாம் தலைநகர் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் ஒரு வல்லுனர் குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும், என்கிறார்.

அரசியல் உறுதியின் தேவை

உப்பளம்

பட மூலாதாரம், Getty Images

தென் தமிழகத்தில் 90களில் சாதிக் கலவரங்கள் தலைவிரித்தாடிய போது, அதற்கு காரணம் வேலைவாய்ப்பின்மை, அதை தடுக்க வேண்டுமெனில் இங்குள்ள மக்களின் சமூகப் பொருளாதார நிலையில் வளர்ச்சி வேண்டும் என்று நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான குழு பரிந்துரைத்தது. பெரிதாக சாதிக் கலவரங்கள் அண்மையில் ஏற்படாவிட்டாலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே இருக்கின்றன. இதற்கு அரசியல் உறுதி இல்லாததே காரணம் என்று கூறுகின்றனர் தொழில் வர்த்தக சங்கத்தினர்.

தேர்தலில் மனித உரிமை மீறல் சம்பவங்களின் தாக்கம்

தூத்தூக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் இருவரும் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு இறந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த இரு சம்பவங்களும் ஏப்ரல் 6, 2021 தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் மே 23, 2018 அன்று 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வருடம் ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு காலத்தில் நிர்ணயித்த நேரத்தை தாண்டி இரவில் கடையை திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக் கைதிகளாக இருந்த போது அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு மனித உரிமை மீறல் சம்பவங்களும் தேர்தல் பொருளாக எதிர்ககட்சியினரால் கையில் எடுக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மத்தியில் இருக்கும் பாஜக அரசும், மாநிலத்தில் இருக்கும் அதிமுக அரசும் சேர்ந்து நடத்திய பச்சை படுகொலை என்று குற்றம் சாட்டினார். சாத்தான்குளம் காவல் மரணத்தையும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம் என்று பேசினார்.

நிராகரிக்கப்படும் விலைவாசி உயர்வு பிரச்சனை

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் தென் தமிழ்நாட்டில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மத ரீதியாகவும், மற்ற மாவட்டங்களில் சாதி ரீதியாகவும் வாக்குகள் செலுத்தப்படும் என்றாலும், விலைவாசி உயர்வு தேர்தலில் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானதாக இருக்கும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை.

கிடுகிடுவென்று உயரும் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை, அதைச் சார்ந்த போக்குவரத்து கட்டண உயர்வு, மருந்து விலை போன்றவை பற்றி அரசியல் கட்சிகள் அக்கரை காட்டவில்லை என்றாலும், நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் இவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்ததும் ஆளும் கட்சியினருக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது, என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Posted in: Tamil News Posted by: admin On: