கருச்சிதைவு விடுப்பு – இந்தியா, நியூஸிலாந்தில் உள்ள முரண்கள் என்ன?

Contacts:
  • சரோஜ் சிங்
  • பிபிசி இந்தி

29 மார்ச் 2021

நியூசிலாந்து அரசு ‘தாய்’க்கு அளித்துள்ள சலுகைகள், அவை ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், Thinkstock

“பார்க்கப்போனால், குழந்தை என்று பிறக்கிறதோ, அந்த நாளில் தாயும் குழந்தையுடன் பிறக்கிறாள்.”

என் வயிற்றில் வளர்ந்த குழந்தை இப்போது இந்த உலகத்தில் இல்லையென்றால் என்ன, என் வயிற்றில் குழந்தையை 40 வாரங்கள் வைத்திருக்க முடியவில்லை என்றால் என்ன? நானும் ஒரு தாய்தான்.

குழந்தையை 20 வாரங்கள் கருப்பையில் சுமப்பவள், ஒரு தாய் இல்லையா? “

ஒரு தனியார் நிறுவனத்தில் தனது மனித ஆற்றல் துறை அதிகாரியிடம் போனில் சண்டை போட்டுக்கொண்டிருந்த ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உரையாடல் முடிவடைவதற்கு முன்பே அழைப்பை கோபமாக துண்டிக்கிறார். அவருடைய கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வரத் தொடங்குகிறது. அவருக்கு அருகே நிற்கும் ரவி (அவரது கணவர்), ப்ரியாவின் தோளில் கை வைத்து, “நீ சில நாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம். வேலையை விட உன் உடல்நலம் எனக்கு முக்கியமானது” என்று சொன்னார்.

இந்தியாவில் ஆறு வார விடுமுறை

ஆனால் ப்ரியா அழைப்பைத்துண்டித்த அடுத்த கணம் அவரது போனில் ஒரு செய்தி வந்தது. செய்தியை அவரது நிறுவனத்தின் மனித ஆற்றல் துறை அதிகாரி அனுப்பினார்.

“நீங்கள் ஆறு வாரங்கள் வீட்டில் தங்கலாம். இந்த துயரமான நேரத்தில், நிறுவனம் உங்களுடன் உள்ளது.”என்று சொன்னது அந்தச் செய்தி.

ப்ரியாவுக்கு இத்தகைய விடுமுறை இருப்பது பற்றி எதுவுமே தெரியாது. நிறுவனம் தன்னை வேலைக்கு வரச் சொல்லப்போகிறது என்றே அவர் கருதினார்.

ஆனால் ப்ரியாவின் அருகே நின்றுகொண்டிருந்த ரவி அப்போதும் வருத்தத்துடன் தான் இருந்தார். மனம் துயரத்தில் இருக்கும் நேரத்தில் அவர் ப்ரியாவுடன் நேரத்தை செலவிட விரும்பினார். ஆனால் இந்தியாவின் தொழிலாளர் நலச்சட்டத்தின் கீழ் இத்தகைய விடுப்பு, வாழ்க்கைத்துணைக்கு வழங்கப்படுவது இல்லை.

இருப்பினும் தனது வருடாந்திர விடுப்பை எடுத்துக் கொண்டு ரவி இதைச் செய்திருக்க முடியும். அவர் அதைத்தான் செய்தார்.

ப்ரியா கடந்த ஐந்து மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். திடீரென்று ஒருநாள் இரவு தூங்கும்போது, ​​படுக்கை முழுவதும் ஈரமாகிவிட்டது போல் உணர்ந்தார்.

மருத்துவமனைக்குச் சென்றபோது கரு கலைந்து விட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

நியூசிலாந்து அரசு ‘தாய்’க்கு அளித்துள்ள சலுகைகள், அவை ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், getty images

அவரால் குழந்தையை பார்க்கக்கூட முடியவில்லை. குழந்தையின் முகம் யாரைப்போல இருந்தது ரவி? என்று மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏதாவது சொல்லுங்கள், அது என்னைப்போல பெண் தானே!!! ரவி அமைதியாக அவளருகே நின்றுகொண்டிருந்தார்.

அது சனிக்கிழமை. அடுத்த 48 மணிநேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தார்கள். இருவருக்கும் இடையே எந்த உரையாடலும் இல்லை. திங்கட்கிழமை ப்ரியா அலுவலகத்திற்கு செல்லவில்லை.​​ செவ்வாயக்கிழமை அலுவலக மனித ஆற்றல் துறையிடம் இருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.

இருவருமே அலுவலகத்திலோ குடும்பத்தினரிடமோ எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு துக்கத்தில் மூழ்கி இருந்தனர். அதிலிருந்து மீண்டு வரும் வழியும் தெரியவில்லை.

டெல்லியில் ஆறு வாரங்கள் வீட்டில் இருந்த ப்ரியா, தன்னை தேற்றிக்கொள்ள முயற்சி செய்தார். ரவி தனக்கிருந்த மன வலியை வெளியே காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.

இருவரும் நியூசிலாந்தில் இருந்திருந்தால், ரவி இன்னும் சில நாட்கள் ப்ரியாவுடன் ஒன்றாக இருந்திருக்க முடியும்.

நியூசிலாந்து அரசு, கடந்த புதன்கிழமை ஒரு வரலாற்று முடிவை எடுத்தது.

’மிஸ்கேரேஜ்’ அல்லது ’ஸ்டில்பெர்த்’ ஏற்பட்டால், மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை தம்பதிக்கு அனுமதித்துள்ளது அந்த நாட்டு அரசு. இப்படிப்பட்ட சலுகையை அளிக்கும் உலகின் முதலாவது நாடாக நியூஸிலாந்து இருக்கக்கூடும்.

இந்தியாவில் சட்டம் என்ன சொல்கிறது?

நியூசிலாந்து அரசு ‘தாய்’க்கு அளித்துள்ள சலுகைகள், அவை ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், getty images

இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர் ‘கருச்சிதைவு விடுப்பு’ பெறும் வசதி உள்ளது. ஆனால் அந்தப்பெண்ணின் கணவருக்கு அத்தகைய வசதி இல்லை.

எனவே ரவி விடுப்பின்போது ப்ரியாவுடன் வீட்டில் தங்க முடியவில்லை. “அந்த 20 வாரங்களில், நான் குழந்தையின் 20 வயது வரை அனைத்தையும் பற்றி யோசித்தேன். குழந்தையின் பெயர், அதன் முதல் உடை, அதன் வளர்ப்பு, டிஸைனர் காலணிகள், குழந்தையின் அறையில் சுவர்களின் நிறம் வரை யோசித்தேன். குழந்தையை தாயுடன் மட்டுமே இணைத்து அரசு ஏன் பார்க்கிறது? தந்தைக்கும் அதே உரிமை உண்டு.” என்கிறார் ரவி.

இந்தியாவின் தொழிலாளர் நல சட்டத்தில், பெண்களுக்கு இதுபோன்ற விடுப்பு வழங்குவது பல ஆண்டுகளாக உள்ளது என்பதை அறியாத ப்ரியாவைப் போன்ற பல பெண்கள் உள்ளனர். இந்தியாவில், 1961 ஆம் ஆண்டின் மகப்பேறு நன்மைச் சட்டத்தின் கீழ், கருச்சிதைவுக்குப்பிறகு, சம்பளத்துடன் ஆறு வாரங்களுக்கு விடுப்பு வழங்குவது கட்டாயமாகும். பெண்கள் ஆறு வாரங்களுக்கு வேலைக்குத் திரும்பவேண்டாம். நிறுவனம், வேலைக்கு வரும்படி அவர்களை கட்டாயப்படுத்தவும் முடியாது.

இந்த சலுகையைப் பெற அந்தப்பெண் மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும். இந்த சட்டம் பின்னர் 2017இல் திருத்தப்பட்டது. ஆனால் கருச்சிதைவு தொடர்பான விதி இன்னும் உள்ளது.

இந்த சட்டம், 10 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தோட்டங்கள், கடை அல்லது நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இருப்பினும் உண்மை என்னவென்றால், இது பல தனியார் நிறுவனங்களில் செயல்படுத்தப்படவில்லை. பல முறை பெண்களே இதைப் பற்றி பேச விரும்புவதில்லை. எனவே அமைதியாக சில நாட்கள் ‘நோய் விடுப்பை’ எடுத்துவிட்டு வேலைக்குத் திரும்புகின்றனர்.

இதுபோன்ற விடுமுறைக்கான வசதி உள்ள அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், நியூசிலாந்தின் இந்த புதிய சட்டத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் எழுதுகிறார்கள்.

நியூஸிலாந்தின் சட்டம் ஏன் சிறப்பு வாய்ந்தது?

“கருச்சிதைவு என்பது ‘நோய் விடுப்பு’ எடுக்க வேண்டிய ஒரு நோய் அல்ல. இது ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பு. இதிலிருந்து மீள அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,”என்று நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய எம்.பி தெரிவித்தார்.

இதன் காரணமாக, இரண்டு பார்ட்னர்களுக்கும் கருச்சிதைவு விடுப்பு வழங்க நியூசிலாந்து அரசு வகை செய்துள்ளது.

கருச்சிதைவுக்குப் பிறகு ஒரு ஆண் துணைவருக்கு இந்த வகையிலான ‘ஊதியத்துடன் கூடிய விடுப்பு’ வழங்கும் முதல் நாடாக நியூசிலாந்து இருக்கக்கூடும்.

இந்த விதிமுறை ’ஸ்டில்பெர்த்’ விஷயத்திற்கும் பொருந்தும். இது மட்டுமல்லாமல், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டாலும், இரு பார்ட்னர்களுக்கும் இந்த சலுகையை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

மிஸ்கேரேஜ் மற்றும் ஸ்டில்பெர்த் என்றால் என்ன?

நியூஸிலாந்தில் கருச்சிதைவு எவ்வளவு பொதுவானது என்பதை புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம்.

நாட்டில், நான்கு பெண்களில் ஒருவர் தனது வாழ்க்கையில் கருச்சிதைவை சந்தித்துள்ளார் என்று இந்த மசோதாவை முன்வைக்கும் போது ​​நாடாளுமன்ற உறுப்பினர் ஜினி ஆண்டர்சன் கூறினார்.

உலகளவில் ஏற்படும் கர்ப்பங்களில், குறைந்தது 30 சதவிகிதம், கருச்சிதைவு மூலம் இழக்கப்படுகிறது என்று அமெரிக்கன் சொஸைட்டி ஃபார் ரீப்ரொடக்டிவ் ஹெல்த்’ அமைப்பின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

தேசிய மருத்துவ நூலகத்தின்படி, இந்த எண்ணிக்கை இந்தியாவில் 15 சதவிதமாகும்.

மருத்துவ அறிவியலின் மொழியில், இது ‘தன்னிச்சையான கருக்கலைப்பு’ அல்லது ‘கர்ப்ப இழப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது.

”கருச்சிதைவு இரண்டு சூழ்நிலைகளில் ஏற்படலாம். முதலாவது, கரு சரியாக இருந்தாலும் பிற காரணங்களால் ரத்தப்போக்கு ஏற்படுவது. இரண்டாவது சூழலில், ’கரு’ கர்ப்பப்பையில் “இறந்துவிட்டால்”, கருக்கலைப்பு செய்வது அவசியமாகிறது. கர்ப்பத்தில் இருக்கும் ’கரு’ இறக்கும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது.. கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குள் கரு இறந்திருந்தால், அது கருச்சிதைவு என்று அழைக்கப்படுகிறது,” என்று மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனிதா குப்தா கூறுகிறார்.

சில பெண்களுக்கு கரு தங்காது. அவர்களுக்கு இவ்வாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ரத்தப்போக்கு, ஸ்பாட்டிங் (மிகக் குறைவான ரத்தப்போக்கு), வயிறு மற்றும் இடுப்பில் வலி, ரத்தத்துடன் கூடிய திசு வெளியேறுவது போன்றவை கருச்சிதைவின் பொதுவான அறிகுறிகள்.

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு அல்லது ஸ்பாட்டிங் ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பது கட்டாயமல்ல. ஆனால் இவை ஏற்பட்டால், கட்டாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கருச்சிதைவுக்குப் பிறகு ஒரு பெண்ணின் உடல் மீண்டும் ஆரோக்கியமாக ஆவதற்கு பொதுவாக ஒரு மாதம் ஆகும். எவ்வளவு ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொருத்து, இது இருக்கும் என்று டாக்டர் அனிதா தெரிவிக்கிறார். எனவே, இந்திய சட்டத்தில் ஆறு வார விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘ஸ்டில்பெர்த்’ என்றால் குழந்தை பிறக்கும்போது அதற்கு உயிர் இருக்காது. இது குழந்தை பிறப்பாகவே கருதப்படுகிறது. இது பிரசவம் என்ற பிரிவில்தான் வைக்கப்பட்டுள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருந்தால், தாய் தனது பாலைக் கொடுக்க வேண்டும். அதை கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே இந்தியாவில் 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

‘ஸ்டில்பெர்த்’ இல் இந்த விடுமுறையை குறைக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் அனிதா கூறுகிறார். இது தொடர்பாக வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன.

நியூஸிலாந்தில் மகளிர் உரிமைகள்

நியூசிலாந்து அரசு ‘தாய்’க்கு அளித்துள்ள சலுகைகள், அவை ஏன் முக்கியம்?

பட மூலாதாரம், Reuters

பெண்களின் நலனுக்காக சட்டங்களை உருவாக்குவதில் நியூஸிலாந்து எப்போதும் முன்னணியில் உள்ளது.

வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் 10 நாட்கள் வருடாந்திர விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸுக்குப் பிறகு அவ்வாறு செய்யும் இரண்டாவது நாடு இது.

40 ஆண்டுகளாக ’கருக்கலைப்பு’ குற்றம் என்றே வகைப்படுத்தப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டுதான் அகற்றப்பட்டது. இப்போது அதை ஒரு ‘சுகாதார நிலை’ என்று கருதி, அது குறித்து முடிவெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமல்படுத்தியதற்கான பெருமை நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னைத்தான் பெருமளவு சேரும். 2016 ஆம் ஆண்டில் ஜெசிண்டா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​அவர் நாட்டின் இளைய பிரதமரானார்.

2018 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுக்கொண்ட உலகின் இரண்டாவது தலைவராக அவர் ஆனார். அதே ஆண்டு அவர் தனது குழந்தையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையை அடைந்தார். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அவர் சிறப்பாக பணியாற்றினார். அது உலக அளவில் பாராட்டைப்பெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Posted in: Tamil News Posted by: admin On: